நாகை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடந்தது


நாகை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்கக்கோரி நாகை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை அனைத்து ஊராட்சிகளிலும் உடனே தொடங்க வேண்டும். வேலை அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சட்டக்கூலி ரூ.224-ஐ உடனே அமல்படுத்த வேண்டும். வாய்க்கால், குளங்களை தூர்வாரும் பணியை முடக்காமல், தொடர்ந்து தூர்வாரும் பணியை செயல்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியினை, கழிவறை, மரக்கன்றுகள் நடுதல் மறறும் கட்டுமான பணிகளுக்கு மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி, ஏ.ஐ.ஒய்.எப். ஒன்றிய செயலாளர் மதன், சங்கத்தை சேர்ந்த தமிழரசி, சுமதி, அமுதா, கஸ்தூரி, விஜயா, சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாபுஜி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் உடனே தொடங்க வேண்டும். வேலை அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தை சேர்ந்த பக்கிரிசாமி, பொன்னுசாமி, தங்கையன், சவுரிராஜன், சந்திரசேகர், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story