என்ஜினீயர்களின் உடல்களை வாங்க மறுத்து ஆலங்குளம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


என்ஜினீயர்களின் உடல்களை வாங்க மறுத்து ஆலங்குளம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 May 2018 3:00 AM IST (Updated: 23 May 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று ஆலங்குளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குளம், 

தனியார் காற்றாலை நிறுவனத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பலியான என்ஜினீயர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, அவர்களுடைய உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று ஆலங்குளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 என்ஜினீயர்கள் பலி

ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்த பால்துரை மகன் கிங்ஸ்டன் (வயது 22). கயத்தாறு அருகே பணிக்கர்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துபாண்டி (25). என்ஜினீயர்களான இவர்கள் 2 பேரும் ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்தில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் குறிப்பன்குளம் பகுதியில் உள்ள பழுதடைந்த காற்றாலையை இந்த 2பேரும் சரி செய்ய முயன்றனர். அப்போது காற்றாலையின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து சிதறியதில் அந்த 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். மேலும் உரிய இழப்பீடு வழங்கும் வரையிலும், அவர்களுடைய உடல்களையும் பெற்று கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தனர்.

அவர்களிடம், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்ரீதர், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தனலட்சுமி மற்றும் காற்றாலை நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் காற்றாலை நிறுவனத்தினர் உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கிங்ஸ்டன், முத்துபாண்டி ஆகியோரின் உடல்களை உறவினர்கள் பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.


Next Story