தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2018 4:30 AM IST (Updated: 23 May 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாமக்கல், எலச்சிபாளையம், எருமப்பட்டி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்,

தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கொட்டும் மழையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சுரேஷ், வெங்காடசலம், ரமேஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எருமப்பட்டி கைகாட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாமக்கல் மாவட்ட பிரதேச குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பிரதேச குழு உறுப்பினர் சதாசிவம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கருப்பண்ணன், மாலா, கணேசன், ராஜ்குமார், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Next Story