ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ரெயில் மறியல்


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ரெயில் மறியல்
x
தினத்தந்தி 24 May 2018 3:45 AM IST (Updated: 24 May 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடம்பத்தூரில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

திருவள்ளூர்

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் கடம்பத்தூர் பகுதி வாலிபர்கள், மாணவர்கள் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் 50-க்கும் மேற்பட்டவர்கள் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலையும் மறுதிசையில் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில்களையும் மறித்து கையில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நேற்று கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story