கர்நாடக சட்டசபையில் குமாரசாமி நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் சபாநாயகராக ரமேஷ் குமார் தேர்வு செய்யப்படுகிறார்


கர்நாடக சட்டசபையில் குமாரசாமி நாளை மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் சபாநாயகராக ரமேஷ் குமார் தேர்வு செய்யப்படுகிறார்
x
தினத்தந்தி 23 May 2018 10:30 PM GMT (Updated: 23 May 2018 9:53 PM GMT)

முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி, கர்நாடக சட்டசபையில் நாளை (வெள்ளிக்கிழமை) மெஜாரிட்டியை நிரூபிக்கிறார்.

பெங்களூரு, 

முதல்–மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமி, கர்நாடக சட்டசபையில் நாளை (வெள்ளிக்கிழமை) மெஜாரிட்டியை நிரூபிக்கிறார். முன்னதாக சட்டசபை சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட உள்ளார்.

மெஜாரிட்டி கிடைக்கவில்லை

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12–ந்தேதி தேர்தல் நடந்தது. அதாவது ராஜராஜேஸ்வரி நகர், ஜெயநகர் 2 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு வாக்கெடுப்பு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 15–ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதாவது அதிகபட்சமாக பா.ஜனதா கட்சி 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேப் போல் காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி 38 இடங்களையும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதேப் போல் காங்கிரஸ் ஆதரவுடன், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்தது. இந்த கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இக்கூட்டணியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 118 ஆக உள்ளது.

3 நாளில் முடிந்த பா.ஜனதா ஆட்சி

இருப்பினும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய்வாலா அழைப்புவிடுத்தார். அதன்படி அக்கட்சியின் மாநில தலைவரான எடியூரப்பா கடந்த 17–ந்தேதி முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 19–ந்தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 111 பேரின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் அக்கட்சி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டின.

ஆனால் வாக்கெடுப்பின் போது, பா.ஜனதாவுக்கு உறுப்பினர்கள் பலம் 104 ஆக மட்டுமே இருந்ததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக எடியூரப்பா தனது முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 3 நாளில் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து காங்கிரஸ்– ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி சார்பில் குமாரசாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

குமாரசாமி பதவி ஏற்றார்

இதைதொடர்ந்து அவர் நேற்று மாலை முதல்–மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் குமாரசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் அவகாசம் வழங்கினார்.

இருப்பினும் குமாரசாமி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா மீண்டும் குதிரை பேரம் நடத்தி இழுக்கும் என கருதி, நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து காட்டுவேன் என்று அறிவித்தார்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடக சட்டசபையில் குமாரசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க உள்ளார். இதையொட்டி சட்டசபையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, சபாநாயகர் தான். இதனால் நாளை காலை சட்டசபை கூடியதும் முதல் பணியாக சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்த கூட்டணி அரசு சார்பில் சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும், துணை சபாநாயகர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ரமேஷ்குமார் நிறுத்தப்படுவதாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனால் சபாநாயகராக ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

காங். எம்.எல்.ஏ.க்களுக்கு விடிவுகாலம்?

அதேப் போல் துணை சபாநாயகராக ஜனதாதளம் (எஸ்) சார்பில், ஏ.டி.ராமசாமிக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்கள் கடந்த 16–ந்தேதி முதல் ஓட்டல்களில் தங்கவைத்து பாதுகாத்து வரப்படுகிறார்கள்.

ஆனால் அந்த எம்.எல்.ஏ.க்கள், தங்களது குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள் மீது எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஓட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.


Next Story