எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரி மாநிலத்தில் 94.37 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரி மாநிலத்தில் 94.37 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 23 May 2018 11:45 PM GMT (Updated: 23 May 2018 10:07 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.37 சதவீதம் மாணவ-மாணவிகள் புதுச்சேரி மாநிலத்தில் தேர்வு பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம் ஆகும்.22 அரசுப்பள்ளிகள் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளன.

புதுச்சேரி, 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1140 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 9 லட்சத்து 50 ஆயிரத்து 397.

விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு நேற்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுத்துறை இணையதளங்களில் ( www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in) வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை வெளியிடும் முறையில் கடந்த வருடம் முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதேபோல இந்த வருடமும் மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் இடம், 2-வது இடம், 3-வது இடம் பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்படவில்லை.

புதுவை மாநிலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் உள்ள 305 பள்ளிகளில் படிக்கும் 7 ஆயிரத்து 770 மாணவர்கள், 8 ஆயிரத்து 662 மாணவிகள் என 17 ஆயிரத்து 432 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினார்கள். இதில் 16 ஆயிரத்து 450 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 94.37 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 0.70 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி 96.50 சதவீதமாகவும், மாணவர் களின் தேர்ச்சி 92.26 சதவீதமாகவும் உள்ளது. அதாவது மாணவர்களைவிட மாணவிகள் 4.2 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுவை பகுதிகளில் உள்ள 85 அரசு பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 5 மாணவ, மாணவிகளில், 4 ஆயிரத்து 407 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 88.05 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 63 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 789 மாணவ, மாணவிகளில் 2 ஆயிரத்து 584 மாணவ, மாணவிகள் வெற்றிபெற்றுள்ளனர். அதாவது 92.65 சதவீதம் பேர் வெற்றிபெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2.49 சதவீதம் அதிகம் ஆகும்.

அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை 1,367 மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதினார்கள். இதில் 1,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 88.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 4.76 சதவீதம் அதிகம் ஆகும். மொத்தமுள்ள 305 பள்ளிகளில் 157 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் புதுச்சேரி பகுதியில் 125 பள்ளிகளும், காரைக்காலில் 32 பள்ளிகளும் உள்ளன. 111 அரசுப்பள்ளிகளில் 22 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதில் புதுவையில் உள்ள 15 அரசு பள்ளிகளும், காரைக்கால் பகுதியில் உள்ள 7 அரசு பள்ளிகளும் அடங்கும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Next Story