பரமக்குடியில் சூறாவளி காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்தன
பரமக்குடியில் சூறாவளி காற்று வீசியதில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பரமக்குடியில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பரமக்குடி
பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளது. காற்றுடன் லேசான மழையும் பெய்தது. இந்தநிலையில் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டான வாரச்சந்தை பகுதியில் சூறாவளி காற்றால் அங்கிருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அருகில் சென்ற மின் கம்பியின் மீது மரக்கிளைகள் விழுந்ததால் அடுத்தடுத்து இருந்த 3 மின் கம்பங்கள் விழுந்தன. அப்போது மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசி பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதற்கிடையில் அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரும் வெடித்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.கோவில் தெரு, சந்தைக்கடை தெரு, பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேதமடைந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Related Tags :
Next Story