சாயர்புரத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் கடை சூறை போலீஸ்நிலைய பெயர் பலகைக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு


சாயர்புரத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் கடை சூறை போலீஸ்நிலைய பெயர் பலகைக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 May 2018 2:45 AM IST (Updated: 25 May 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது

சாயர்புரம், 

சாயர்புரத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீஸ் நிலைய பெயர் பலகைக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியில் காயம் அடைந்த செல்வசேகர் நேற்று இறந்தார். இந்த தகவல் அறிந்தவுடன் சாயர்புரம், செவத்தையாபுரம் பகுதி மக்கள் அங்குள்ள மெயின்ரோடு பகுதியில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் செவத்தையாபுரத்தில் இருந்து சாயர்புரம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது சாலையோரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு பெஞ்சுகள் மற்றும் கற்களை சாலையில் தூக்கி வீசினர். முட்செடிகள், டயர்களை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். செவத்தையாபுரம்– சாயர்புரம் மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடையை போராட்டக்காரர்கள் அடித்து உடைத்தனர். உள்ளே புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை அள்ளி வெளியே வீசி சூறையாடினர். அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

போலீஸ்நிலைய பெயர் பலகைக்கு தீவைப்பு

நடுவக்குறிச்சி என்ற ஊர் பெயர் பலகை மற்றும் அங்குள்ள தெருக்களின் பெயர் பலகைகளை பிடுங்கி நடுரோட்டில் போட்டு உடைத்தனர். இரும்பால் ஆன மின்கம்பத்தை சாய்த்து ரோட்டின் குறுக்கே போட்டனர். இதுதவிர சில இடங்களை மரங்களை வெட்டியும் ரோட்டின் குறுக்கே போட்டனர். சாயர்புரம் போலீஸ் நிலைய பெயர் பலகையை பிடுங்கி நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

போலீசார் விரட்டி அடித்தனர்

தகவல் அறிந்த போலீசார் ஏராளமானவர்கள் சாயர்புரம் பகுதிக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களது வாகனம் செல்ல முடியாத வகையில் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் நடந்து சென்றே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை விரட்டி அடித்தனர். நாலாபுறமும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் சாயர்புரம்– செவத்தையாபுரம் சாலை போர்க்களம் போல் உள்ளது. இதை தொடர்ந்து சாயர்புரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story