தேனி மாவட்டத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு


தேனி மாவட்டத்தில் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2018 3:45 AM IST (Updated: 31 May 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

ஆண்டிப்பட்டி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் அதிகமாக காற்று வீசி வருகிறது. ஆண்டிப்பட்டி, காமாட்சிபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக வேகமாக காற்று வீசி வருகிறது. கடந்த 2 நாட்களாக ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஒரு காற்றாலையின் ஒரு நாள் மின்உற்பத்தி சராசரியாக 27 ஆயிரம் யூனிட்டாக இருந்தது.

குறிப்பாக காமாட்சிபுரம், ஆண்டிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி மிகவும் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமாக காற்று வீசும் பட்சத்தில் ஒரு காற்றாலையில் அதிகபட்சமாக அதன் உற்பத்தி திறனை பொறுத்து ஒரு நாளைக்கு 38 ஆயிரம் யூனிட் வரையில் மின்சார உற்பத்தி செய்ய முடியும்.

காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல போதிய மின் வழித்தடம் இல்லாத நிலையில், அதிகமாக காற்று வீசிய போதும், ஒரு நாளைக்கு சுமார் 2 மணி நேரம் காற்றாலைகளில் மின்சார உற்பத்தியை நிறுத்தி வைக்க மின்சாரத்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக காற்றாலை பணியாளர்கள் கூறினர்.

மேலும் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த கூடுதல் மின்வழித்தடத்தை அரசு அமைக்க முன்வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story