குஜராத்தில் மீட்கபட்ட தஞ்சை பெரிய கோவில் சிலைகள் ரெயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது


குஜராத்தில் மீட்கபட்ட தஞ்சை பெரிய கோவில் சிலைகள் ரெயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது
x
தினத்தந்தி 1 Jun 2018 4:45 AM IST (Updated: 1 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சிலைகள் ரெயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. சிலைகளுக்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சை,

தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுபோன ராஜராஜ சோழன், லோகமாதேவி ஐம்பொன் சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக மீட்டனர்.

ரூ.150 கோடி மதிப்பிலான இந்த 2 சிலைகளும் பலத்த பாதுகாப்புடன் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டது.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10-வது நடைமேடைக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 4 மணிக்கு வந்தடைந்தது. அப்போது தமிழக தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், ரெயில் பாதுகாப்பு குழு உறுப்பினரும், பா.ஜ.க. தேசிய செயலாளருமான எச்.ராஜா, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

உலக தமிழாராய்ச்சி மையத்தின் சைவ சிந்தாந்தத்துறை மாணவர்கள் பாரம்பரிய இசை வாத்தியம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மீட்கப்பட்ட சிலைகளுக்கு மலர்தூவினர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகளை பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். சிலர் அந்த சிலைகளை வணங்கினர். செல்போன் மூலம் படம் பிடித்தனர்.

மீட்கப்பட்ட சிலைகள் குறித்து அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறும்போது, ‘குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன்- கலிகோ அருங்காட்சியகத்தில் இருந்த ராஜராஜ சோழன், லோகமாதேவி ஐம்பொன் சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் மீட்டு கொண்டுவந்துள்ளனர். இந்த சிலையை 90 நாட்களில் மீட்டுள்ளோம். இந்த சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்’ என்றார் 

Next Story