தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிரதமர் வருத்தம் தெரிவிக்காதது ஏன்? தொல்.திருமாவளவன் கேள்வி


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிரதமர் வருத்தம் தெரிவிக்காதது ஏன்? தொல்.திருமாவளவன் கேள்வி
x
தினத்தந்தி 2 Jun 2018 3:45 AM IST (Updated: 2 Jun 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி அளித்தார்.

மதுரை,

கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். அது போதாது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியும், அரசு வேலையும், காயம் பட்டவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது ஜெயலலிதா தான். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்றி அறிவிக்க வேண்டும். தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என கூறியது யார்? சமூக விரோதிகள் யார் என்பதை சட்டமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும். உரிமைக்காக போராடும் மக்களை சமுக விரோதிகள் என கூறுவது போல் இருக்கிறது.

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தமோ, இரங்கலோ தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? காஷ்மீர் போன்ற எல்லையோர மாநிலங்களில் தான் இணைய தள சேவையை முடக்குவர். ஆனால் மத்திய அரசு உத்தரவுப்படி தூத்துக்குடியில் இணைய சேவை முடக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனிநபர் ஆணைய விசாரணைக்கு பதில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து பதவியில் உள்ள நீதிபதி மூலம் விசாரணை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story