பள்ளியில் குழந்தைகளை சேர்க்க கடன் வாங்கி வந்த தொழிலாளியை தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு
பள்ளியில் குழந்தைகளை சேர்க்க கடன் வாங்கி வந்த தொழிலாளியை தாக்கி ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
கன்னிவாடி,
திண்டுக்கல் அருகே உள்ள பாலக்கோட்டையை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 33). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவர், தனது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ரெட்டியார்சத்திரத்தில் உள்ள நண்பரிடம் நேற்று முன்தினம் இரவு ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
வழியில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் குழந்தைவேலுவை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை பறித்தனர். உடனே அவர் 3 பேரையும் குழந்தைவேலு பிடிக்க முயன்றார்.
ஆனால், அவர்கள் குழந்தைவேலுவின் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் கடித்து வைத்து விட்டு தப்பி ஓட தொடங்கினர். இதைப்பார்த்த டீக்கடை உரிமையாளர் அன்புராஜ், மர்ம நபர்களை விரட்டி பிடிக்க முயன்றார். அவரையும் மர்ம நபர்கள் தாக்கியதுடன் தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடாரியால் வெட்ட முயன்றனர். இதனால், அவர் பின்வாங்கி ஓடிவந்துவிட்டார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை ரெட்டியார்சத்திரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.