தர்மபுரி அருகே விபத்து; நடிகையின் கார் மோதியதில் மெக்கானிக் பரிதாப சாவு
தர்மபுரி அருகே நடிகையின் கார் மோதியதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காரை அடித்து நொறுக்கினர்.
தர்மபுரி
தர்மபுரி அருகே உள்ள ஏ.கொல்லஅள்ளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 39). தர்மபுரியில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் ஏ.கொல்லஅள்ளிபுதூர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம், எதிரே பைக் மெக்கானிக்குகளான தர்மபுரியை சேர்ந்த வெற்றிவேல் (19), ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் (18) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மோட்டார்சைக்கிளும், நடிகை சசிகலா சென்ற காரும் கண் இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதைப்பார்த்ததும் அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். வெற்றிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நடிகை சசிகலாவின் உறவினர்கள் காரை எடுத்து செல்ல முயன்றனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் காரை எடுக்கவிடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். சிலர் அந்த காரை கல்லால் தாக்கியும், அடித்தும் நொறுக்கினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story