கர்நாடகத்தில் ராட்சத அலை மோதி படகு கவிழ்ந்தது: உயிர்தப்பி வந்த குமரி மீனவர்கள்


கர்நாடகத்தில் ராட்சத அலை மோதி படகு கவிழ்ந்தது: உயிர்தப்பி வந்த குமரி மீனவர்கள்
x
தினத்தந்தி 2 Jun 2018 4:45 AM IST (Updated: 2 Jun 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ராட்சத அலை மோதி படகு கவிழ்ந்ததில் உயிர்தப்பி வந்த குமரி மீனவர்கள் கூறிய உருக்கமான தகவல்கள்.

நாகர்கோவில்,

கர்நாடக கடல் பகுதியில் ராட்சத அலை மோதி படகை கவிழ்த்ததில் 20 அடி ஆழம் வரை மூழ்கிவிட்டோம் என்றும், உயிர் தப்பியது எப்படி? என்பது குறித்தும் குமரி மீனவர்கள் உருக்கமாக கூறினார்கள்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் செபஸ்தியான் (வயது 41), ஜெகதாஸ் (30), சிஜன் (25), புஷ்பராஜ் (46), அருள்ராஜ் (24) மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மீனவர் ததேயுஸ் (50) என மொத்தம் 6 பேர் கடந்த 14-ந் தேதி தேங்காப்பட்டணத்தில் இருந்து ஏஞ்சல்-1 என்ற படகில் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

இதே போல ஏஞ்சல்-2 என்ற மற்றொரு படகில் பூத்துறையை சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த 2 படகுகளும் கர்நாடக மாநில கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு, கரை பகுதியை நோக்கி புறப்பட்டன.

சம்பவத்தன்று அதிகாலை 5 மணி அளவில் ஏஞ்சல்-1 படகு முன்னே செல்ல அதில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஏஞ்சல்-2 படகு பின்னால் வந்துகொண்டு இருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததுடன், கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் எழும்பின. இதில் ஏஞ்சல்-1 படகானது அதிக உயரத்தில் எழும்பி வந்த ராட்சத அலை மோதியதில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 6 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த சமயத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த ஏஞ்சல்-2 படகின் என்ஜினும் பழுதாகியதால் அந்த படகு நகர முடியாமல் நடுக்கடலில் நின்றது. இதனால், முன்னால் சென்று கொண்டிருந்த ஏஞ்சல்-1 படகு கவிழ்ந்ததும் அந்த படகில் இருந்தவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. சுமார் 5 மணி நேரம் தத்தளித்த 4 பேரையும் குமரி மாவட்டம் புத்தன்துறையை சேர்ந்த மீனவர்கள் வந்த படகானது மீட்டு கரை சேர்த்தது. அவர்கள் 4 பேரும் காயம் அடைந்து இருந்தனர். ஆனால் கடலில் முழ்கிய மற்ற 2 பேரை மீட்க முடியவில்லை.

அதைதொடர்ந்து, என்ஜின் பழுதாகி நின்ற ஏஞ்சல்-2 படகில் இருந்த மீனவர்களையும் அவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 2 படகுகளிலும் இருந்த மீட்கப்பட்ட 13 மீனவர்களில், 11 பேர் நேற்று குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதிக உயரத்தில் ஆக்ரோஷமாக வந்த அலைகளுக்கு நடுவே சுமார் 5 மணி நேரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு போராடியது குறித்து மீனவர் செபஸ்தியான் உள்ளிட்ட மீனவர்கள் உருக்கமுடன் கூறியதாவது:-

ஏஞ்சல்-1 படகில் 6 மீனவர்கள் இணைந்து கர்நாடக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்களை பிடித்திருந்தோம். எங்களை பின்தொடர்ந்து வந்த ஏஞ்சல்-2 படகில் 9 பேர் இருந்தார்கள். நாங்கள் கர்நாடக மாநிலம் கார்வார் கடல் பகுதியை அடைந்தபோது, பின்னால் வந்த ஏஞ்சல்-2 படகு எங்கள் கண்ணுக்கு தென்படவில்லை. காற்றும், மழையும் இருந்ததால் நாங்கள் 6 பேருமே விடிய விடிய உறங்கவில்லை.

அந்த சமயத்தில்தான் சுமார் 15 அடி உயரத்தில் எழுந்து வந்த அலை ஆக்ரோஷமாக எங்கள் படகில் மோதியது. அதைத் தொடர்ந்து வந்த மற்றொரு ராட்சத அலை மீண்டும் மோதியதில் நிலை கொள்ளாமல் தத்தளித்த எங்கள் படகு தலைகுப்பற கவிழ்ந்தது. இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. படகுக்கு கீழே மாட்டிக்கொண்டதால் சுமார் 20 அடி ஆழம் வரை கடலுக்குள் சென்றுவிட்டோம். பின்னர் மூச்சை பிடித்துக்கொண்டு நீந்தி கடல் மட்டத்தை அடைந்தோம். ஆனால் சக மீனவர்களான அருள்ராஜூம், புஷ்பராஜூம் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் 2 பேரையும் தேடினோம். எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. படகு கவிழ்ந்ததில் காயம் அடைந்த எங்களால் மழை மற்றும் ராட்சத அலைகளுக்கு இடையே போராடவும் முடியவில்லை.

எங்கள் பின்னால் வந்த ஏஞ்சல்-2 படகில் இருந்த மீனவர்களை உதவிக்கு அழைக்க சத்தம் போட்டோம். ஆனால் அவர்களது படகு எங்கள் அருகில் வரவில்லை. இதனால் அந்த படகு எங்களை கடந்து சென்றுவிட்டதோ? என்று நினைத்து, கவிழ்ந்த படகின் உதிரி பாகங்களை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தோம்.

சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு எங்கள் அருகே குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு படகு வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் உடனே கடலில் குதித்து எங்களை மீட்டனர். படகில் ஏறி நிம்மதி பெருமூச்சு விட்டபிறகுதான் ஏஞ்சல்-2 படகு பழுதாகி நின்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஏஞ்சல்-2 படகில் இருந்தவர்களையும் மீட்டோம். நாங்களும், எங்களை மீட்ட படகில் இருந்தவர்களும் சேர்ந்து கடலில் மூழ்கிய அருள்ராஜ் மற்றும் புஷ்பராஜை தேடினோம். எனினும் அவர்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடலோர காவல் படையினர் வந்துவிட்டனர். கடலில் மூழ்கிய 2 மீனவர்களையும் அவர்கள் தேடுவதாக கூறி, எங்களை கரை திரும்பும்படி தெரிவித்தனர். படகு கவிழ்ந்ததில் 4 மீனவர்களுமே காயம் அடைந்திருந்ததால் நாங்கள் கரைக்கு திரும்பிவிட்டோம். பின்னர் கர்நாடகாவில் ஒரு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்தனர். தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளோம். எங்களது படகு முழுவதும் நாசமாகிவிட்டது. நாங்களும் காயம் அடைந்திருக்கிறோம். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story