அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் ஆதரவு இருந்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்- திருநாவுக்கரசர் பேச்சு
அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் ஆதரவு இருந்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
பள்ளிபாளையம்
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் பள்ளிபாளையம் ஜி.வி.மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் பி.டி.தனகோபால் தலைமை தாங்கினார். நகர தலைவர் பழனிசாமி வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், குமாரபாளையம் நகர தலைவர் ஜானகிராமன், திருச்செங்கோடு நகர தலைவர் செல்வகுமார், மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி பெஞ்சமன், மாநில மகளிர் அணி தலைவி ஜான்சி ராணி மற்றும் ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர், பரமத்தி, கோவை மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நான் இதுவரை 18 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறேன். காமராஜர் ஆட்சி காலத்தில் 15 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவரால் எழுத்தறிவு பெற்றவர்கள் ஏராளம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 ஆக உடைந்து காணப்படுகிறது. எடப்பாடி அணி, ஓ.பி.எஸ்.அணி, தினகரன் அணி என 3 ஆக உள்ளனர்.
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும். மத்தியில் ஆளும் மோடி அரசு விரைவில் முடிவுக்கு வரும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வருவார். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பொய் வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி இதுவரை அதை நிறைவேற்றவில்லை.
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மக்கள் பிரச்சினைகள் பற்றி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக ஆலாம்பாளையத்தில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து திருநாவுக்கரசருக்கு வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story