மணல் கடத்தலை தடுக்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியினர் மனு
தாராபுரம் பகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டி தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர்.
குண்டடம்,
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தாராபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அமராவதி ஆற்றில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சங்கரண்டாம் பாளையம், புதுப்பாளையம், கவுண்டையன்வலசு, எர்னமேடு ஆகிய பகுதிகளில் பகலும், இரவும் ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதுடன், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மணல் கடத்தலில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடந்தையாக இருந்துவருவதாக தெரிய வருகிறது. எனவே மணல் திருட்டை உடனடியாக நிறுத்தாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமாக நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.