ஊட்டி–கேத்தி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்கம், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஊட்டி– கேத்தி இடையே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறு சுற்றுலா என்ற பெயரில் நேற்று மலை ரெயில் இயக்கப்பட்டது.
ஊட்டி,
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறு சுற்றுலா என்ற பெயரில் ஊட்டி– கேத்தி இடையே நேற்று மலை ரெயில் இயக்கப்பட்டது. சேலம் ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் சந்திரபால் மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளுக்கு தொப்பி, ஊட்டி மலை ரெயில் குறித்த கையேடு போன்றவற்றை வழங்கினார்.
ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு லவ்டேல் வழியாக கேத்தியை 3 மணிக்கு சென்றடைந்தது. அங்கு மலை ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு ஒரு சமோசா, ஒரு கப் வெஜிடபிள் சூப் ஆகியவை வழங்கப்பட்டது. பின்னர் கேத்தியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு லவ்டேல் வழியாக ஊட்டிக்கு 4 மணிக்கு மலைரெயில் வந்தடைந்தது.
மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் கேத்தி பள்ளத்தாக்கை கண்டு ரசித்தனர். மலை ரெயிலில் பயணிக்க முதல் வகுப்புக்கு ஒரு நபருக்கு ரூ.400, 2–ம் வகுப்புக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மலை ரெயில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.