தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு தாமதம் இன்றி மின் இணைப்பு வழங்க கோரிக்கை


தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு தாமதம் இன்றி மின் இணைப்பு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2018 3:30 AM IST (Updated: 3 Jun 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு கோரி பணம் கட்டிய விவசாயிகளுக்கு தாமதம் இன்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகள் முதல்–அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டம் வறட்சியான மாவட்டமாக உள்ளது. இங்கு பல இடங்களில் கிணற்று தண்ணீரை வைத்தே விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் கிணறுகளுக்கு விவசாய மின் இணைப்பு பெற தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை நம்பி பல விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. உதாரணமாக திருப்புவனம் பஜனை மடத்தெருவை சேர்ந்த செல்வம் என்ற விவசாயி 2½ ஏக்கரில் வெற்றிலை பயிரிட்டுள்ளார். அவர் கடந்த 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு ரூ.2½ லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

பொதுவாக தட்கல் திட்டம் என்பதே உடனடியாக வழங்குவதற்கு தான் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் மின்வாரியத்தில் இருந்த அவருக்கு அனுப்பிய பதிலில் பதிவுமூப்பு அடிப்படையில் வரிசையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் செலுத்தி 7 மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்காததால் அந்த விவசாயி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

இதுதவிர தற்போது மின்வாரிய அலுவலகத்தில் தளவாட சாமான்கள் இல்லாத நிலையுள்ளது. இதனால் எந்த இடத்திலாவது ஒரு இடத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் உடனடியாக அதை சரிசெய்ய முடியவில்லை. எனவே தேவையான தளவாட சாமான்கள் கையிருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story