தமிழக அரசு பஸ்சை தீ வைத்து எரித்த வழக்கு: மேலும் 5 பேர் கைது
தமிழக அரசு பஸ்சை தீவைத்து எரித்த வழக்கில், கைதானவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலாப்பட்டு,
புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 27ந்தேதி மாலை 6 மணிக்கு தமிழக அரசு பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சில் 43 பயணிகள் பயணம் செய்தனர்.
புதுச்சேரி – சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக அந்த பஸ் சென்ற போது புதுவை மாநில எல்லை அருகே காலாப்பட்டில் காரில் வந்த ஒரு கும்பல் அந்த பஸ்சை வழிமறித்து கற்கள், தடிகளை வீசி தாக்கினார்கள். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் அந்த கும்பல் பஸ்சின் முன்பக்க கதவை அடைத்து படிக்கட்டில் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
பஸ்சில் பிடித்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவத்தொடங்கியது. பஸ்சுக்குள் சிக்கிய பயணிகள், அவசர அவசரமாக இறங்கினார்கள். சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து தப்பினார்கள். சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சுக்கு தீவைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தமிழக அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்டதை பொதுமக்கள் சிலர் தங்களின் செல்போன் மூலமாக படம் பிடித்தனர். அந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பஸ்சுக்கு தீவைத்தவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து பஸ்சுக்கு தீவைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் தமிழக அரசு பஸ்சுக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக புதுவை 2–வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் குயிலாப்பாளையம் லட்சுமிபுரம் அருண், பெரிய காலாப்பட்டை சேர்ந்த அகஸ்டின்ராஜ் (வயது 20), பொம்மையார்பாளையம் தருனேஷ், தந்திராயன்குப்பம் சந்திரபோஸ் (19), புதுவை வெள்ளாளர் வீதியை சேர்ந்த முத்துக்குமரன் (21) ஆகிய 5 பேர் சரணடைந்தனர். அவர்களை போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து காலாப்பட்டு போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது வன்னியர் சங்க தலைவர் குரு மரணம் தொடர்பாக வாட்ஸ்–அப்பில் பரவிய தகவலால் ஆத்திரம் அடைந்து தமிழக அரசு பஸ்சை தீவைத்து எரித்ததாக அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தங்களுடன் பெரியகாலாப்பட்டு கார்த்திகேயன்( வயது 19) கோரிமேடு பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்த இளையபெருமாள் (21), கோரி மேடு காமராஜ் நகரை மாவீரன்(19), புதுவை வம்பாகீரப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்த முகிலன்(18) மற்றும் சோலை நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(18) ஆகியோரும் ஈடுபட்டதாக வாக்கு மூலம் அளித்தனர்.
இதன் அடிப்படையில், காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆகியோர் விசாரணை நடத்தி கார்த்திகேயன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.