ஆழ்துளை கிணறு மானியத்துடன் அமைக்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


ஆழ்துளை கிணறு மானியத்துடன் அமைக்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2018 4:00 AM IST (Updated: 3 Jun 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஆழ்துளை கிணறு மானியத்துடன் அமைக்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்தவதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் நீர்பாசன கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நீர் பாசனக் கடன் பெறுவதற்கு சிறு, குறு விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினை சேர்ந்தவராகஇருக்க வேண்டும்.

18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, நிலத்தடி நீர் ஆய்வறிக்கை, சிட்டா அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, நிலத்தின் வரைபடம், குடும்ப அட்டை நகல் ஆகிய சான்றுகள் வைத்திருக்க வேண்டும். மேலும், கடனுதவி பெற விரும்புவர்கள், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story