ஓவியங்களை ரசிக்கலாம்.. உற்சாகமாக படிக்கலாம்..


ஓவியங்களை ரசிக்கலாம்.. உற்சாகமாக படிக்கலாம்..
x
தினத்தந்தி 3 Jun 2018 8:00 AM GMT (Updated: 3 Jun 2018 7:47 AM GMT)

அரசு பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இருந்தாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் தணிந்தபாடில்லை.

 பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகளின் மீதான ஆசை குறையாததற்கு, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும் ஒரு காரணமாக இருக்கிறது.

தனியார் பள்ளிகள் என்றால் பிரமாண்டமான கட்டிடங்களை கட்டி, அழகழகான செடிகளை முகப்பில் வளர்த்து, வகுப்பறைகளை ஓவியங்கள், படங்களால் அலங்கரித்து அமர்க்களப்படுத்தி மக்களை ஈர்த்துவிடுவார்கள். சில பள்ளிக்கூட வளாகமே பூங்காக்கள் போன்று காட்சி அளிக்கும். அத்தகைய கவர்ச்சிக்குள் மக்கள் எளிதாக சிக்கிவிடுவார்கள். அரசு பள்ளிகளை எடுத்துக் கொண்டால் விரிசல் அடைந்த கட்டிடங்கள், அழுக்கடைந்த சுவர்கள் என ஏதோ ஒரு குடோனுக்குள் அடைக்கப்பட்டது போன்ற உணர்வு தோன்றுவதாக கருதுகிறார்கள்.

அதில் இருந்து மாறுபட்டு, தனியார் பள்ளிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு பேரழகாய் காட்சி யளிக்கிறது அரசு பள்ளி ஒன்று! அந்த பள்ளி, தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ளது.

அதன் வெளிப்புற சுவர், வகுப்பறை உட்புறச் சுவர் எல்லாம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. மாணவர்கள் எளிதில் கற்கும்வகையில் பாடங்கள் சார்ந்த ஓவியங்கள் நிறைய தீட்டப்பட்டிருக்கின்றன. ‘அரசுப் பள்ளிகளை காப்போம்’ என்ற பெயரில் செயல்படும் ஆசிரியர்கள் குழுவினர் இந்த அற்புதமான செயலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

கோடை விடுமுறை காலத்தை பள்ளிகளை அழகாக்குவதற்காக இந்த ஆசிரியர் குழுவினர் செலவிட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளை சுத்தம் செய்து, சேதம் அடைந்த கட்டிடங்களை சீரமைத்து, வர்ணம் பூசி, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார்கள்.

இக்குழுவில் 25-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் 20 பேர் அரசு பள்ளி ஆசிரியர்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்த பணிகளை செய்து வருகின்றனர்.

பள்ளி வகுப்பறைக்குள் முயல், ஆமை கதையை சொல்லும் ஓவியங்கள், தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் போன்றவை மாணவர்களை வசீகரிக்கின்றன. ஆங்கிலத்தை எளிதாக கற்கும்விதத்தில் ஆங்கில எழுத்துகளை எழுதி, அதற்கான படங்களையும் தீட்டி இணைத்திருக்கிறார்கள். கதை சொல்லும் ஓவியங்கள், பாடங்களை எளிதில் கற்க வைக்கும் ஓவியங்கள் என வகுப்பறைகள் அனைத்தும் அழகாய் மட்டுமல்ல, அறிவாகவும் மாறியிருக்கின்றன.



தேனி மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற பகுதிகளிலும் இந்த குழுவினர் அரசு பள்ளிகளை அழகாக்கி உள்ளனர். இவர்கள் கைவண்ணத்தில் 15 அரசு பள்ளிகள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன.

இது பற்றி, அரசு பள்ளிகளை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் சொல்கிறார்:

‘‘எனது சொந்த ஊர் கூடலூர். நான் திருப்பூரில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். கடந்த 2005-ம் ஆண்டு கோடை விடு முறையின் போது, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியின் சுவருக்கு வர்ணம் பூசும் முயற்சியை தும்மலக்குண்டு அரசு உயர்நிலைப்பள்ளி வரலாறு ஆசிரியர் முருகன் மேற்கொண்டார். அவரோடு சேர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டபோதுதான், வர்ணம் பூசும் சுவர்களில் ஓவியமும் வரையலாம் என்ற எண்ணம் தோன்றியது. சுவர்களில் ஓவியம் வரைந்த போது, அழகாக இருந்தது. மாணவர்களின் கற்றலுக்கும் அது பலன்தந்தது. அதை தொடர்ந்துதான் ‘அரசு பள்ளிகளை காப்போம்’ என்ற பெயரில் குழுவாக இணைந்து செயல்பட முடிவு செய்தோம். அதற்கு ஆசிரியர்கள் சிலரும் உதவினர்.

கூடலூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அழகேசன், ஆசிரியர்கள் சித்தரஞ்சன், பாலசுந்தர், பாண்டியன், ராஜூ, சின்னச்சாமி, சீனிவாசன் உள்பட பலர் எங்கள் குழுவோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை காலங்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று பள்ளிகளை அழகாக்கி வருகிறோம்.

ஏற்கனவே கூடலூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதியில் 10 பள்ளிகளை அழகாக்கி இருந்தோம். இந்த கோடை விடுமுறையில் மேலும் 5 பள்ளிகளில் ஓவியங்கள் வரைய திட்டமிட்டோம். அதன்படி திருப்பூரில் 2 பள்ளிகளில் பணிகளை முடித்துவிட்டோம். தற்போது கூடலூர் லோயர்கேம்ப் அரசு தொடக்கப்பள்ளி, பளியன்குடி அரசு தொடக்கப்பள்ளி, கூடலூர் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் ஓவியப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.



இந்த குழுவில் உள்ள ஆசிரியர்கள் பலரும் முகநூல் மூலமும், நண்பர்கள் மூலமும் அறிமுகமானவர்கள். இதற்கான செலவுகளுக்காக குழுவில் உள்ள ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை வழங்குகிறோம். அத்துடன், மீட்டெடுக்க உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் உதவியையும் நாடுவோம்.

அவர்கள் கொடுக்கும் பணத்தோடு, நாங்கள் வழங்கும் பணத்தையும் சேர்த்து பள்ளியை புனரமைத்து, ஓவியங்கள் வரைந்து வருகிறோம். அதிக பணம் கிடைத்தால், அதைக் கொண்டு அந்த பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி களை செய்து கொடுக்கிறோம். எங்களோடு பயணிக்கும் ஆசிரியர்களும், தன்னார்வலர்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி பணியாற்றி வருகிறார்கள். இந்த சேவைக்காக எங்கள் விடுமுறை காலம் முழுவதையும் செலவிடஉள்ளோம்’’ என்றார்.

பொதுமக்கள் மத்தியில் இவர்களது செயலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு அவர் களது ஒத்துழைப்பும் கிடைக்கிறது.

இந்த சேவையில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள், ‘‘இந்த பணி எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது. இதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு அரசு பள்ளிகள் எந்த வகையிலும் குறைவானது இல்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். நாங்கள் விடுமுறை காலத்திலும் இந்த பணிகளில் ஈடுபட எங்கள் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். எங்கள் சேவைக்கு மக்களும் அங்கீகாரம் தருவதால் சோர்வின்றி உழைக்கிறோம்’’ என்றார்கள்.

அரசு ஆசிரியர்களின் இந்த அழகான பணிக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன! 

Next Story