பஸ்சுக்கு தீவைப்பு சம்பவத்தில் இறந்த மூதாட்டி உடலை 4–வது நாளாக வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


பஸ்சுக்கு தீவைப்பு சம்பவத்தில் இறந்த மூதாட்டி உடலை 4–வது நாளாக  வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2018 2:15 AM IST (Updated: 4 Jun 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்சுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் காயமடைந்து இறந்த மூதாட்டியின் உடலை வாங்க மறுத்து 4–வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மெஞ்ஞானபுரம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்சுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் காயமடைந்து இறந்த மூதாட்டியின் உடலை வாங்க மறுத்து 4–வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கினால் மட்டுமே மூதாட்டியின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் திட்டவட்டமாக கூறி வருவதால் சிக்கல் நீடித்து வருகிறது.

மூதாட்டி சாவு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி கடந்த 25–ந்தேதி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பாலத்தில் வைத்து அரசு பஸ்சுக்கு சிலர் தீவைத்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த வள்ளியம்மாள் (வயது 63) பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கடந்த 31–ந்தேதி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இறந்த வள்ளியம்மாளின் உடலை பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே அவருடைய உடலை வாங்குவோம் என, மகன் ஆறுமுகமும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வள்ளியம்மாள் உடலை ஒப்படைப்பது குறித்து நேற்று முன்தினம் இரவு மெஞ்ஞானபுரத்தில் உள்ள வள்ளியம்மாள் மகன் ஆறுமுகம் வீட்டுக்கு ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்–இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,‘ கலெக்டரின் தனிப்பட்ட அக்கறையினால் அரசிடம் இருந்து உங்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவராண நிதி பெற்று தந்துள்ளார். இந்த சம்பவத்துடன், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஒப்பிட்டு கொண்டு கூடுதல் நிதி எதிர்பார்க்க கூடாது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக பிடித்து கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளோம்.

ரூ.20 லட்சம் நிதி கோரிக்கை

எனவே, அரசு நிவாரண நிதியை பெற்று கொண்டு வள்ளியம்மாள் உடலை பெற்று கொள்ளுமாறு கேட்டு கொண்டனர். ஆனால் அவருடைய மகனும், உறவினர்களும் இதை ஏற்க மறுத்ததுடன், ‘குடும்பத்திற்கு ரூ.20 லட்சமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று திட்டவட்டமாக கூறினர். நீண்டநேரமாக போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் நிலவரத்தை விளக்கி கூறினர். ஆனால், ஆறுமுகமும் அவருடைய உறவினர்களும் ஏற்க மறுத்ததால் போலீஸ் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

சிக்கல் நீடிப்பு

இதை தொடர்ந்து வள்ளியம்மாள் உடலை வாங்க மறுத்து நேற்று 4 –வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வள்ளியம்மாள் உடல் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி பிண அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பிரச்சினையில் சிக்கல் நீடித்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story