திருப்புவனம் அருகே ரெயில்வே கேட் பாதையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், பொன்.ராதாகிருஷ்ணனிடம் விவசாயிகள் கோரிக்கை


திருப்புவனம் அருகே ரெயில்வே கேட் பாதையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், பொன்.ராதாகிருஷ்ணனிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2018 4:15 AM IST (Updated: 4 Jun 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே ரெயில்வே கேட் பாதையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் புதூரில் இருந்து தவளைக்குளம் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஆள் இல்லாத ரெயில்வே கேட் பாதை ஒன்று உள்ளது. இந்த பாதை வழியாக திருப்புவனம் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் விவசாய பணிகளுக்காக சென்றுவருவது வழக்கம். இதையடுத்து விவசாயிகள் நிலங்களுக்கு தேவையான பொருட்களை இந்த பாதை வழியாக கொண்டு செல்வார்கள். அதேபோல் அறுவடை செய்த விளை பொருட்களை வாகனங்களில் இந்த பாதை வழியாக கொண்டு செல்வார்கள்.

இந்த பாதை இல்லையெனில் வன்னிக்கோட்டை வழியாக சுமார் 3கிலோ மீட்டர் தூரம் வரையும், திருப்புவனம்–நரிக்குடி சாலை வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரையும் சுற்றி விளை பொருட்களை வாகனங்களில் எடுத்துச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அலைச்சலை சந்திக்க நேரிடும். கடந்த ஆண்டு ஆள் இல்லாத ரெயில்வே கேட் பாதைகளை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த பாதையை மூடுவதற்காக வந்த ஜே.சி.பி எந்திரத்தை விவசாயிகள் மறித்து முற்றுகை போராட்டம் நடத்தி பாதையை மூட வேண்டாம் என்று வலியுறுத்தினர்.

இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் விவசாயிகள் சார்பில் இந்த ரெயில்வே கேட் பாதையில் கேட் கீப்பரை நியமித்து தொடர்ந்து விவசாயிகள்சென்றுவர அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் விவசாயிகள் கணநாதன், ஆதிமூலம், காசிராஜன், செல்வம், பாண்டி கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து நேற்று திருப்புவனம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அந்த பாதையை பார்வையிட்டார். அப்போது 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கை அவரிடம் வலியுறுத்தினர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரியிடம் ஆலோசனை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தார். அப்போது பா.ஜனதா கட்சியின் கோட்ட பொருப்பாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலரவிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


Next Story