வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 4 பேர் தற்கொலை மிரட்டல்
குள்ளஞ்சாவடி அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 4 பேர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42). தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய தமிழக படை நிர்வாகி. இவர் மற்றும் அந்த கட்சியின் பிரமுகர்கள் பழனிசாமி (40), இளையராஜா (39), சக்திமுருகன் (40) ஆகிய 4 பேரும் நேற்று காலை 9.30 மணி அளவில் குள்ளஞ்சாவடி அருகே கோ.சத்திரம் நான்குமுனை சந்திப்பில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் கையில் கட்சி கொடியுடன், வேல்முருகனை விடுதலை செய்யக்கோரியும், கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பியபடியே செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களை போலீசார் கீழே இறக்கினர். இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.