அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்கும் முடிவு சட்டசபையில் தெரிவிக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்


அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்கும் முடிவு சட்டசபையில் தெரிவிக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
x
தினத்தந்தி 4 Jun 2018 5:00 AM IST (Updated: 4 Jun 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்கும் முடிவு சட்டசபையில் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.40 லட்சம் செலவில் அவசர சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குடிமராமத்து என்ற பெயரில் இதுவரை கண்டிராத வகையில் தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மழைநீர் சேமிப்பு முறையில் புதிய புரட்சியை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் 7 இடங்களில் குளத்தை ஆழப்படுத்தி, சீரமைத்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும், 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இதுவரை மொத்தம் ரூ.7 கோடியே 15 லட்சம் செலவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

தனிநபர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு இதுபோன்ற நல்ல பணிகளை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுபோல் தமிழக மக்கள் பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.

அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 வயது நிரம்பிய மாணவர்களை மட்டுமே பள்ளிக்கூடங்களில் சேர்க்க முடியும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் 3 வயதில் இருந்து பயிற்சி அளிக்கிறார்கள். இதுபற்றி அரசு ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சட்டசபையில் தெரிவிக்கப்படும். வெளியில் கருத்து கூற இயலாது.

தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டண விவரங்களை பள்ளிக்கூடங்களின் முன்பு வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக கோபியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தங்களது பணியை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் ஒரு ஆசிரியர் உடல் நலம் சரியில்லாத காரணத்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பள்ளிக்கு வராமல் இருக்கக்கூடும். இந்த நிலை எந்ததெந்த பகுதியில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், ரத்த வகை, தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். இதனால் மாணவர்கள் பள்ளிக்கூடம் வராமல் இருந்தால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் மாணவர்களின் வருகை பதிவும் மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலத்திற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் வருகை பதிவேடு அமல்படுத்தப்படும். இதேபோல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நல்லுறவை மேம்படுத்த ஒவ்வொரு பள்ளிகளிலும் மாதம் ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம், விபத்தில் மாணவர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சமும், பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய அளவில் காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இந்த திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

Next Story