டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது: கலெக்டரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு


டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது: கலெக்டரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு
x
தினத்தந்தி 5 Jun 2018 4:15 AM IST (Updated: 5 Jun 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

தேனி பழைய பஸ் நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். இதில் பல்வேறு அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் மொத்தம் 220 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தின் போது, வருவாய்த்துறை சார்பில் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 11 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்டம் பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்கும் மக்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

தேனி பழைய பஸ் நிலையம் எதிரிலும், நேரு சிலைக்கு பின்புறம் அமைந்துள்ள பகுதியிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. பல போராட்டங்களுக்கு பிறகு 2 கடைகளும் அகற்றப்பட்டன. தற்போது இந்த பகுதியில் உள்ள நோட்டு புத்தக கடைகள், பல்பொருள் அங்காடிகளில் மாணவ, மாணவிகள் சகஜமாக சென்று பொருட்கள் வாங்கி வருகிறார்கள். மீண்டும் இதே பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைக்க முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது. எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும், அரசு நலத்திட்டங்களை பெறுவதில் இடையூறுகள் இருப்பின் அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வருகிற 8–ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவது தொடர்பாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி துண்டுபிரசுரம் வினியோகம் செய்யக்கூடாது என்றனர்.

உடனே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் தலைமையில் கலெக்டரை சந்தித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய அனுமதி கேட்டு மனு அளித்தனர். மனு அளித்த பின்னர், கோரிக்கைகள் விளக்க துண்டு பிரசுரங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கு அவர்கள் வினியோகம் செய்தனர்.


Next Story