கள்ளநோட்டு வழக்கில் போலீஸ் தேடிய முக்கிய ஆசாமி கைது


கள்ளநோட்டு வழக்கில் போலீஸ் தேடிய முக்கிய ஆசாமி கைது
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கில் போலீஸ் தேடிய கிதர் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார். கள்ளநோட்டுகளை அச்சடித்து ரூ.5 கோடிவரை வெளிமாநிலங்களில் புழக்கத்தில் விட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கோவை,

கோவை சாய்பாபா காலனியில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காரமடை நால்ரோட்டை சேர்ந்த சுந்தர் (38), கோவை வடவள்ளியில் வசித்து வந்த கிதர்முகமது (62) ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்தது தெரியவந்தது.

அங்கிருந்த அறையில் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள், மற்றும் கலர்ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் பிரிண்டர் கருவி, காகிதங்களை கத்தரிக்கும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் கள்ள நோட்டு வழக்கில் போலீஸ் தேடி வந்த முக்கிய ஆசாமியான கிதர்முகமது என்பவரை, கோவை–கேரள எல்லைப்பகுதியான ஆனைக்கட்டி பகுதியில் நேற்று போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கிதர் முகமது கள்ள நோட்டு தயாரிப்பில் கில்லாடி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் கள்ள நோட்டுகளை தயாரித்து வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2010–ம் ஆண்டு கோவை வடவள்ளியில் கள்ள நோட்டு வைத்திருந்தபோது போலீசில் சிக்கி கைதானார்.

கிதர் முகமது, சுந்தர் ஆகியோர் மீது கோவையிலும், கேரளா, ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலும் கள்ளநோட்டு குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களை அந்த மாநில போலீசாரும் தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று கைதான கிதர்முகமதுவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

நான், முன்பு காய்கறி வியாபாரம் செய்தேன். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே கள்ளநோட்டு அச்சடிக்கும் மோசடியில் ஈடுபட்டேன். கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் என்மீது 2 கள்ளநோட்டு வழக்குகளும், சரவணம்பட்டி, வெரைட்டிஹால்ரோடு, போத்தனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், திருச்சியில் ஒரு வழக்கும் உள்ளன.

சிறையில் கூட்டாளிகளாக சேர்ந்த ஆனந்த், சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து கள்ளநோட்டு அச்சிட்டு பெரிய பணக்காரன் ஆக ஆசைப்பட்டேன்.

கோவை வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து தங்கி இருந்து இரவு, பகலாக கள்ளநோட்டுகளை அச்சிட்டோம். கூட்டாளி சுந்தர், கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் வசிக்கும் அவருடைய அண்ணன் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். நானும் அவருடன் சென்று அச்சடித்த கள்ளநோட்டுகளை வினியோகம் செய்தோம். பலர் கமி‌ஷன் அடிப்படையில் கள்ளநோட்டுகளை பெற்றுச்சென்றனர்.

10 ஆயிரம் மதிப்புக்கு நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.1 லட்சத்துக்கு கள்ள 2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தோம். பலர் எங்களிடம் போட்டி போட்டுக்கொண்டு கள்ள நோட்டுகளை வாங்கிச்சென்றனர்.

கிட்டத்தட்ட ரூ.5 கோடிவரை புழக்கத்தில் விட்டுள்ளோம். அதிக மதிப்புமிக்கது என்பதாலும், எளிதில் கொண்டு செல்ல வசதியாக இருந்ததாலும் 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்தோம். அடுத்ததாக 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டோம். அதற்குள் ஆனந்த் போலீசில் சிக்கி கொண்டதால் நானும் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு கிதர் முகமது கூறியுள்ளார்.

இதில் தலைமறைவாக இருக்கும் சுந்தர், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்தவர். கள்ளநோட்டுகளை வடிவமைப்பது, ஸ்கேன் செய்வது போன்றவற்றை துல்லியமாக செய்வதில் நிபுணர் என்பதால் இவர்தான் கள்ளநோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story