நான்கு வழிச்சாலை அமைக்க வழுதூர் விநாயகர் கோவிலை இடிக்கக்கூடாது 15 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


நான்கு வழிச்சாலை அமைக்க வழுதூர் விநாயகர் கோவிலை இடிக்கக்கூடாது 15 கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Jun 2018 3:15 AM IST (Updated: 5 Jun 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

நான்கு வழிச்சாலை அமைக்க வழுதூர் அருளொளி விநாயகர் கோவிலை இடிக்கக்கூடாது என்று 15 கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் வழுதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 15 கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் நடராஜனை சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தில் ஆத்மசாந்தி நிலையத்தினை தவத்திரு சித்திரமுத்து அடிகளார் கடந்த 1956–ம் ஆண்டு தொடங்கி பக்திமார்க்கம் மூலம் மக்கள் சேவையாற்றினார். மேலும் அவர் மலேசியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆத்ம சாந்தி நிலையத்தை நிறுவி அதன் மூலம் ஆன்மிக பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1967–ம் ஆண்டு வாலாந்தரவை குரூப் வழுதூர் கிராமத்தில் பெரியபட்டணம் விலக்கு சாலையில் கிரையம் பெறப்பட்ட இடத்தில் ஆகமவிதிகளின்படி விநாயகர் கோவில் கட்டி மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும் இதன் அருகில் கோவில் திருப்பணிகளை மேற்கொண்ட செந்தூரான் சுவாமிகளின் ஜீவ சமாதியும் உள்ளது. சுமார் 50 ஆண்டு காலமாக பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய இந்த கோவிலில் விழாக்காலங்களிலும், சங்கடஹர சதுர்த்தி நாளன்றும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது நான்கு வழிச்சாலை அமைக்க இந்த கோவில் மற்றும் செந்தூரான் சுவாமிகள் ஜீவசமாதி ஆகியவற்றை கையகப்படுத்த திட்டமிட்டுஉள்ளனர். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலையின் தென்புறத்தில் மட்டுமே நான்கு வழிச்சாலை அமைக்க தேவையான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இந்த கோவிலின் மறுபுறம் சாலை அமைக்க தேவையான இடம் உள்ளது.

அந்த இடத்தினை கையகப்படுத்தி சாலை அமைத்தால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, விநாயகர் கோவில் மற்றும் ஜீவசமாதியை இடிக்கக்கூடாது. மறுபுறம் உள்ள பகுதியை கையகப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் விசாரித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story