வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை கொண்டுவர பெண் மனு


வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை கொண்டுவர பெண் மனு
x
தினத்தந்தி 5 Jun 2018 4:00 AM IST (Updated: 5 Jun 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி பெண் கோரிக்கை மனு அளித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள கும்பரம் அருகே உள்ளது மூப்பன்வலசை. இந்த ஊரைச்சேர்ந்தவர் கருப்பையா(வயது55) என்பவரின் மனைவி பஞ்சவர்ணம். இவர் தனது மகன்கள் கந்தசாமி, கார்மேகம் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கண்ணீர் மல்க கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எனது கணவர் கடந்த 2009–ம் ஆண்டு தோட்ட வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார். மாதம் ரூ.18ஆயிரம் சம்பளம் என்று ஒப்பந்தம் பேசி சென்ற நிலையில் 3 ஆண்டுகள் மட்டும் பணம் அனுப்பினார். அதன்பின்னர் வேலைக்கு வைத்திருந்த நபர் ஊருக்கு செல்லும்போது மொத்தமாக திருப்பி தருவதாக கூறி சம்பளம் தராமல் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பேசியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டுஉள்ளது என்று தெரிவித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுமாறு கூறினோம்.

இந்நிலையில் கடந்த 25–ந் தேதி எனது கணவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. கணவரை இழந்து நானும், எனது குடும்பத்தினரும் கவலை அடைந்து வருகிறோம்.

எனவே, எனது கணவரின் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story