அடிப்படை வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் கலெக்டரிடம், 3 கிராமங்களை சேர்ந்தோர் மனு
அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகவும், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளும், மயானம், சமுதாயகூடம், இலவச குடியிருப்பு உள்ளிட்டவை செய்துதர கோரியும் 3 கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேட்டுமுள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
மேட்டுமுள்ளிக்குளம் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அருந்ததியர் சமுதாயத்தினர் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். 30 வீடுகளில் 50 குடும்பத்தினர் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எங்களுக்கு அரசு அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரவில்லை. சுகாதார கேடு அதிகமாக உள்ளது. மற்ற சமுதாயத்தினரால் எங்களுக்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுதந்திரமாக திருவிழாக்கள் கொண்டாட முடியவில்லை. குழந்தைகள் பொது இடங்களில் விளையாடுவதற்கும், பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது. எனவே எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், இலவச குடியிருப்புகள், மயானம், சமுதாயகூடம் ஆகியவை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.
இதேபோல் கொத்தனேரியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கொடுத்துள்ள மனுவில், கடந்த 16.10.2017 அன்று மயான வசதி செய்துதர கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே இனியும் தாமதம் செய்யாமல் கவுண்டம்பட்டி சாலையில் எங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. நாங்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர், தெருவிளக்கு, குளியல்தொட்டி, தனிநபர் கழிப்பறை மற்றும் சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.