துப்பாக்கி சூடு சம்பவம்: சுப்பிரமணியசாமியின் கருத்துகளை ஏற்கதேவையில்லை - வைகோ பேட்டி
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சுப்பிரமணியசாமியின் கருத்துகளை ஏற்கதேவையில்லை என வைகோ மதுரையில் பேட்டி அளித்தார்.
மதுரை,
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோது, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்தவர்கள் பாமர மக்களா, நக்சலைட்டுகளா, விடுதலைப்புலிகளா என்பதை தெரிவிக்க வேண்டும். கூடங்குளம் முதல் அனைத்து போராட்டத்தின் பின் புலத்திலும் தீவிரவாதிகள் இருந்துள்ளனர்” என்றார்.
இதுகுறித்து நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “சுப்பிரமணியசாமி எந்த கருத்தையும் தவறாகவே கூறுவார். யார் மீதும் எளிதாக பழி போடுவார். மனதில் தோன்றியதை யோசிக்காமல் அப்படியே கூறுவார். அவர் கூறும் கருத்துக்களை கவனத்தில் ஏற்க தேவையில்லை“ என்றார்.
இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களை சமூக விரோதிகள் என்று கூறியது தவறு. அவர்கள் வேடிக்கை பார்க்க சென்றவர்கள். துப்பாக்கி சூடு குறித்து ஓய்வு பெற்ற தனிநபர் ஆணையம் வேண்டாம். பதவியில் உள்ள நீதிபதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அரசு திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது. பின்னர் அதை மூடி மறைக்கப் பார்க்கிறது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பல அரசியல் தலைவர்கள் பார்க்க வந்தனர். ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கூட நீதிமன்றம் சென்று அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.