காங்கிரஸ் ஆட்சியில் 2 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை - ரங்கசாமி குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கேட்டுதான் வரவேண்டிய நிலை உள்ளது. உறுப்பினர்களே வந்து செல்ல முடியாத அளவிற்கு சட்டசபை உள்ளது. அப்படி ஒரு சூழலில் சட்டமன்றம் நடக்கிறது. சட்டசபையே இந்த நிலையில் இருந்தால் பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும். தினமும் கொலை, கொள்ளை என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நேற்று கூட(நேற்றுமுன்தினம்) ரூ.1 கோடி அளவுக்கு நகை, பணம் திருடு போய் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இந்தநிலையில் தற்போது சட்டசபையை கூட்டியுள்ளனர். எப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளனர் என்று கூட அரசுக்கு தெரியவில்லை. ஏழை எளிய மக்களுக்கு வழங்கக் கூடிய இலவச அரிசியையே இவர்களால் வழங்க முடியவில்லை. முதியோர், ஊனமுற்றோர் உதவித்தொகை சரியாக கொடுக்கவில்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்த நலத்திட்டங்களை கூட செயல்படுத்தவில்லை.
சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை, நோயாளிகளுக்கு உணவு இல்லை, தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை. இதனால் ஏழை நோயாளிகள் வெளியே சென்று தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை.
எதற்கெடுத்தாலும் நிதியில்லை, கவர்னர் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவதைத்தான் தினமும் பார்த்துக் கொண்டிக்கிறோம். மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த என்ன வழி என்று அரசு கவனித்து செயல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை நிமிர்த்துவிடுவோம் என்று கூறியதை எங்கே செய்தனர். 20 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பாசிக் நிறுவனத்திடம் இருந்த மதுபானக்கடை உரிமத்தை ரத்து செய்துள்ளார்கள். இதை யாருக்காக? எதற்காக செய்தார்கள்? என்று தெரியவில்லை.
கூட்டுறவு சர்க்கரையை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. காரைக்கால் ஸ்பின்னிங் மில்லும் இயங்கவில்லை. 2 ஆண்டுகளாக மற்றவர்களையே குறை சொல்லிக்கொண்டிருந்தால் எப்போதுதான் பிரச்சினைகளை சரி செய்வார்கள்? இதனை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.