காட்டுப்பன்றி- குரங்குகளால் நாசமான கம்பு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு


காட்டுப்பன்றி- குரங்குகளால் நாசமான கம்பு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு
x
தினத்தந்தி 5 Jun 2018 4:30 AM IST (Updated: 5 Jun 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், காட்டுப்பன்றி- குரங்குகளால் நாசமான கம்பு பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம், விவசாயி மனு கொடுத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இந்நிலையில் முசிறி அருகே உள்ள திண்ணனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். விவசாயி. இவருடைய தாய் மூக்காயி. இவர்கள் இருவரும் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு, சேதமடைந்து நாசமான கம்பு பயிர்களை கையில் எடுத்து வந்தனர். ஞானசேகர் கலெக்டர் ராஜாமணியிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்களுடைய விவசாய நிலத்தில் 1 ஏக்கர் கம்பு பயிரிட்டுள்ளோம். கம்பு பயிர்களை காட்டுப்பன்றிகள், குரங்குகள் அழித்து நாசம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் செலவு செய்து நெல் பயிர் நடவு செய்தோம். அப்போதும் இதுபோல காட்டுப்பன்றியும், குரங்குகளும் அவற்றை நாசம் செய்து அழித்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின. தற்போது ரூ.20 ஆயிரம் செலவு செய்த கம்பு பயிர்களை நாசம் செய்து விட்டன. எனவே, வேளாண்மைத்துறை, வனத்துறை அதிகாரிகளை அனுப்பி காட்டுப்பன்றி, குரங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்திட வேண்டும். மேலும் நாசமான கம்பு பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

திருவெறும்பூர் ஒன்றியம் வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர் சங்க செயலாளர் பாலமாதவன் நிர்வாகிகளுடன் வந்து ஒரு மனு அளித்தார். அதில், காவிரி ஆற்றில் டயர் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிகேட்டு வலியுறுத்தியதன் பேரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பகுதியில் சர்க்கார்பாளையம் என்ற இடத்தில் குவாரி அமைக்கப்பட்டது. தற்போது திருவளர்ச்சோலையில் அமைக்கப்பட்டுள்ளது. அது 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதால் திருவெறும்பூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர் பிழைப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, டயர் மாட்டு வண்டிக்கென்று தனியாக காவிரி ஆற்றின் தென்கரை வேங்கூர் வாரி முனையில் மணல் குவாரி அமைத்து கொடுக்க கேட்டுக்கொள்கிறோம், என்று கூறப்பட்டு இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய குழுவின் சமயபுரம் பகுதி நிர்வாகிகள் கனகராஜ், இந்துராஜ், விவசாய சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், மாதர் சங்க நிர்வாகிகள் ஜோதி, ஜெயராணி மற்றும் சமயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சமயபுரம் புகழ்பெற்ற கோவில் நகரமாகும். பள்ளி, கல்லூரிகள் அருகில் சமயபுரம் 4 ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக லால்குடி உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று டாஸ்மாக் கடையை இடம் மாற்றுவது என்று முடிவானது. ஆனால், 8 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கடை அகற்றப்படவில்லை. கோர்ட்டு உத்தரவின்பேரில் அக்கடை மூடப்பட்டது. ஆனாலும் சமயபுரம் பகுதியில் ஏற்கனவே இருந்த இடத்தில் மதுக்கடையை திறக்க முயற்சி நடப்பதாக அறிகிறோம். அங்கு மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது, என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் மண்ணச்சநல்லூர் கள்ளர்தெரு, நத்தம் வாரித்தெரு, அனுமார் கோவில் தெரு மற்றும் சமயபுரம் ரோடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், திருச்சி-துறையூர் சாலையில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். அப்பகுதியில் உள்ள குறுகலான சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. மதுக்கடை திறந்திருக்கும் நேரம் மட்டுமல்லாது, எப்போதும் அந்த கடை முன்பு குடிமகன்கள் ரோட்டை ஆக்கிரமித்தனர். இதனால், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்று வரும் பெண்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படும் நிலை இருந்தது. கோர்ட்டு உத்தரவால் தற்போது டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த கடையை திறக்க முற்பட்டால் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. 

Next Story