குமாஸ்தா மனைவி கடத்தல் வழக்கில் திருப்பம் அடகு வைத்த நகையை மீட்க இயலாததால் நாடகமாடியது அம்பலம்


குமாஸ்தா மனைவி கடத்தல் வழக்கில் திருப்பம் அடகு வைத்த நகையை மீட்க இயலாததால் நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 5 Jun 2018 4:45 AM IST (Updated: 5 Jun 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் வக்கீல் குமாஸ்தா மனைவி கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அடகு வைத்த நகையை மீட்க இயலாததால் கடத்தல் நாடகம் ஆடியது அம்பலமாகி உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற ரமேஷ் (வயது 45), வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார். இவருடைய மனைவி தங்கம் (39), மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக உள்ளார். இவர்களது வீடு கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு அருகே உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி அன்று ரமேஷ் தன் மனைவியுடன் வந்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், ‘12-ந் தேதி அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 33 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை திருடிவிட்டனர். மேலும், மர்ம நபர்கள் ‘இனியும் எங்களை தொந்தரவு செய்தால் வீட்டில் உள்ளவர்களை கடத்துவோம்‘ என்று மிரட்டல் கடிதத்தையும் வீட்டில் வைத்து சென்று உள்ளனர். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் நிலையம் அருகே நடந்ததாக கூறப்பட்ட இந்த துணிகர திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவிலில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதால் இந்த சம்பவத்தையும் போலீசார் எப்போதும் போல் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே கடந்த 29-ந் தேதி பார்வதிபுரத்துக்கு சென்ற தங்கம் திடீரென மாயமானார். இதனால் ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ரமேசின் செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ‘உன் மனைவியை கடத்தி வைத்துள்ளோம். போலீசில் கூறினால் உன் குழந்தைகளையும் கடத்தி விடுவோம்‘ என மிரட்டல் விடுத்தார். இதுபற்றியும் ரமேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நகை மற்றும் பணம் திருட்டு போனதாக கூறப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் ரமேசின் மனைவி தங்கமும் கடத்தப்பட்டது மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்தார்.

நகை, பணத்தை திருடியவர்கள் தங்கத்தையும் கடத்த வேண்டிய காரணம் என்ன? ரமேஷ் மற்றும் தங்கத்துக்கு யாரேனும் விரோதிகள் உண்டா? தங்கம் நடத்தி வந்த சுயஉதவி குழு மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வந்ததா? என்றெல்லாம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். ஆனால் போலீசார் விசாரித்த அனைத்து கோணங்களிலும் விடை கிடைக்கவில்லை.

இதனால் இந்த வழக்கு போலீசாருக்கு சவாலாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு தனிப்படைக்கு மாற்றப்பட்டது.

தனிப்படை போலீசார் தங்கத்தின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுய உதவிக்குழு மூலமாக தங்கத்திற்கு அதிகளவில் பணம் வந்துள்ளதும், எனினும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கடன் கேட்டபோது தங்கத்தால் கொடுக்க இயலவில்லை என்றும் தெரியவந்தது. இதனால் சுய உதவிக்குழு பணத்தை அவர் என்ன செய்தார்? என்ற விவரம் யாருக்கும் தெரியாமல் இருந்தது. மேலும் அவர் வீட்டு பத்திரத்தையும் அடமானம் வைத்து ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். இந்த விவரம் அவரின் கணவருக்கு கூட தெரியாமல் தங்கம் பார்த்துக்கொண்டார் என்றும் தெரியவந்தது.

இதெல்லாம் விசாரித்து அறிந்து கொண்ட போலீசாருக்கு தங்கத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே தனிப்படை போலீசார் தங்கத்தை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ரமேசின் செல்போனுக்கு மீண்டும் வந்த மர்ம அழைப்பில் பேசியவர், உன் மனைவியை ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டுள்ளதாகவும், போதை ஊசி போட்டு அவருக்கு மொட்டை அடித்ததாகவும் கூறினார்.

இதையடுத்து ஆரல்வாய்மொழி பஸ் நிலையத்தில் தங்கம் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட தங்கத்தை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையின் போது தங்கம் தன்னை பித்து பிடித்தவர் போன்று காட்டிக்கொண்டார். கடத்தியவர்கள் பற்றி விவரம் கேட்டபோது, நடந்தது அனைத்தும் மறந்துவிட்டதாக தெரிவித்தார். போலீசார் துருவி துருவி விசாரித்தும் அவர் பதில் கூறவில்லை. உறவினர்கள் கேட்டபோது கூட வாய் திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று காலையில் அனைத்து உண்மைகளையும் போலீசாரிடம் கூறினார். அதாவது நகை மற்றும் பணம் திருட்டு போனதாக தங்கம் கூறியதோடு, கடத்தல் நாடகமும் ஆடிய விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தார். தங்கத்தின் நாடகம் அம்பலமானதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

தங்கம் நடத்தி வந்த சுய உதவிக்குழு மூலமாக நிறைய பணம் வந்திருக்கிறது. அந்த பணத்தை பலருக்கு கடனாக அளித்துள்ளார். ஆனால் கொடுத்த கடனை அவரால் வசூலிக்க இயலவில்லை. இதனால் சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்கள் தங்களது பணத்தை திரும்பி கேட்டபோது செய்வதறியாது திகைத்த அவர், உடனே வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பணம் கொடுத்துள்ளார். ஆனாலும் அந்த பணம் போதுமானதாக இல்லை. இதனால் தன் நகைகளை அடகு வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அடகு வைத்த நகையை அவரால் மீட்க இயலவில்லை. வட்டி கட்டவும் முடியவில்லை. இதனால் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடியதாக திட்டமிட்டு நாடகமாடி இருக்கிறார். மிரட்டல் கடிதத்தையும் அவரே தயாரித்து இருக்கிறார். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தினங்களில் தங்கம் தானாகவே திருச்செந்தூர் சென்று மொட்டை போட்டுவிட்டு அங்கேயே தங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆரல்வாய்மொழி வந்துள்ளார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை ஏற்கனவே அவர் திருட்டு போனதாக கூறிய நகை என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story