காங்கேயத்தில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது


காங்கேயத்தில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2018 4:45 AM IST (Updated: 6 Jun 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் பள்ளி மாணவியை வடமாநில வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

காங்கேயம்,

காங்கேயம்–சென்னிமலை சாலையில் நேற்று மாலை வடமாநில வாலிபர் ஒருவர் பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவியை அழைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்து சந்தேகமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அந்த வாலிபரை மறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது, குடிபோதையில் இருந்த அந்த வாலிபர் இந்தி மொழியில் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். உடனே மாணவியிடம் அந்த வாலிபர் குறித்து கேட்டபோது, ‘நான் அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வருகிறேன். இந்த மாமா எனக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்து தன்னுடன் வரும்படி அழைத்து செல்வதாக கூறினாள். இதனால் அந்த மாணவிக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அவர் அந்த மாணவியை கடத்திச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.

உடனே அந்த வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் மாணவியையும், அந்த வாலிபரையும் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திரா(வயது 25) என்றும், காங்கேயத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு அவரை அழைத்துச்சென்று விசாரணை செய்தனர். அப்போது, அவர் அங்கு வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர் வேறு சில அரிசி ஆலை பெயரை கூறினார். அங்கும் போலீசார் சென்று விசாரித்த போது, இவர் அங்கு வேலை செய்யவில்லை என்று தெரியவந்தது.

மேலும் அவர் குடிபோதையில் நிதானம் இழந்து மாற்றி, மாற்றி தகவல்களை கூறியதால் போலீசார் அவரை போலீஸ்நிலையத்துக்கு மீண்டும் அழைத்து சென்றனர். இதற்கிடையே மீட்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் மாணவியை பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர். பள்ளி மாணவியை வடமாநில வாலிபர் கடத்த முயன்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story