நீதிபதி அருணா ஜெகதீசன் 2–வது நாளாக விசாரணை கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டார்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணைய அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று 2–வது நாளாக விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணைய அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று 2–வது நாளாக விசாரணை நடத்தினர். கலவரம் நடந்த இடங்களையும் அவர் பார்வையிட்டார்.
துப்பாக்கி சூடுதூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களும், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பொதுமக்களின் இருசக்கர வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் இருந்த வாகனங்களும் கொளுத்தப்பட்டன.
இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்இதையடுத்து விசாரணை ஆணைய அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தார். தொடர்ந்து அவர், துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் காயமடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விசாரணை நடத்தினார்.
மேலும், துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையா, ரஞ்சித்குமார், சண்முகம் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்ற அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி தைரியமாக சொல்லுங்கள், பயப்படாதீர்கள் என்று அவர்களிடம் தெரிவித்தார்.
2–வது நாளாக விசாரணைநேற்று 2–வது நாளாக நீதிபதி அருணா ஜெகதீசன் தனது விசாரணை தொடர்ந்தார். இதற்காக துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் இறந்த ஸ்னோலின், கார்த்திக், மணிராஜ், ஜான்சி, அந்தோணி செல்வராஜ், செல்வசேகர், தமிழரசன் ஆகியோர் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், விசாரணை ஆணையம் முன்பு தைரியமாகவும், எந்தவித அச்சமும் இல்லாமல் தகவல்களை தெரிவிக்குமாறு அவர்களிடம் தெரிவித்தார். அப்போது, துப்பாக்கிச்சூட்டில் இறந்த மணிராஜின் உறவினர்களிடம் அரசு வழங்கிய இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் வழங்கினார்.
கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டார்இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் கலவரம் நடந்த இடமான கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தீவைத்து எரிக்கப்பட்டு சேதமடைந்து கிடந்த மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவை பார்வையிட்டார். மேலும், கல்வீச்சில் சேதமடைந்த கலெக்டர் அலுவலக பகுதிகளையும் பார்த்தார்.
துப்பாக்கி சூடு நடந்த இடங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் சிவகாமசுந்தரி, பறக்கும் படை தாசில்தார் நல்லசிவம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.