இளையான்குடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி
இளையான்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாகவும், முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதியாகவும் இளையான்குடி உள்ளது. இளையான்குடியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்குள்ள துணை மின் நிலையத்தில் இருந்து இளையான்குடி, தாயமங்கலம், நகரக்குடி, குமாரக்குறிச்சி, கண்ணமங்கலம் மற்றும் 100–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் இளையான்குடி பகுதியில் கடந்த 2 மாதங்களாக மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையில் சமீபத்தில் பெய்த மழையாலும், கடந்த 2 தினங்களாக காற்றுடன் பெய்த மழையாலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. இது ஒருகாரணமாக சொல்லப்பட்டாலும், மின்வாரிய துறையினரின் அலட்சியம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக சாத்தனி, சேதுகுடி, புதுக்குளம், அரனையூர், அரியாண்டிபுரம், கருஞ்சுத்தி, வளையனேந்தல், கரும்புக்கூட்டம், வடக்கு கீரனூர் உள்ளிட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதிலும் இரவு நேரம் முழுவதும் மின்சாரம் வினியோகம் கொடுப்பது கிடையாது. இதனால் இரவில் புழுக்கத்தில் மக்கள் தவிக்கின்றனர். தற்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சாப்பாடு உள்ளிட்டவற்றை தயார் செய்ய முடியாமல் அவதியடைகின்றனர்.
எனவே இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேதமடைந்து காணப்படும் மின்கம்பம் மற்றும் கம்பிகளை சீரமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.