தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 6 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2018 2:30 AM IST (Updated: 6 Jun 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 6 பேரின் உடல்கள் இன்று (புதன்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 6 பேரின் உடல்கள் இன்று (புதன்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கோர்ட்டு உத்தரவுப்படி ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீதமுள்ள மணிராஜ், கிளாஸ்டன், அந்தோணிசெல்வராஜ், ஜெயராமன், ரஞ்சித்குமார், ஜான்சி ஆகியோரின் உடல்களை 6 நாட்கள் பாதுகாப்பாக வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, 6 உடல்களையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் 6 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இன்று பரிசோதனை

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும்போது, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்களின் பிரேத பரிசோதனை புதுச்சேரி ஜிப்மர் டாக்டர் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 2 டாக்டர்கள், மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டு உள்ளன. இதனால் இன்று (புதன்கிழமை) காலை முதல் பிரேத பரிசோதனை நடைபெறும். இரவுக்குள் அனைத்து உடல்களும் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் இதுவரை இறந்த 8 பேருக்கு தலா ரூ.20 லட்சம் அரசு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.


Next Story