அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Jun 2018 3:45 AM IST (Updated: 6 Jun 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கந்தர்வகோட்டையில் அடுத்தடுத்து உள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பகத்துவான்பட்டி பகுதியை சேர்ந்த காமராஜ். இவர் கந்தர்வகோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள செங்கிப்பட்டி சாலையில் அரிசிக்கடை மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காமராஜ் உள்ளே சென்று பார்த்த போது, கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.6 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதேபோல அதே பகுதியில் உள்ள உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரத்தையும், பூச்சி மருந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணத்தையும், லாரி புக்கிங் ஆபீஸ் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story