தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம், மனித உரிமை ஆணையம் விசாரணை
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
துப்பாக்கி சூடுதூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் புபுல் தத்தா பிரசாத், ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகிய 5 பேர் வந்து உள்ளனர்.
இவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். அதன்படி தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் இறந்தவர்களின் உறவினர்கள், காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சுட்டவர்களிடம் விசாரணைதொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படும் 9 போலீசார் உள்பட சுமார் 45 பேர் ஆணையம் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து அவர்களின் பதில்களையும் பதிவு செய்து கொண்டனர்.
அதேநேரத்தில் தேசிய மனித உரிமை ஆணைய குழுவை சேர்ந்த 2 பேர் மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு சென்றனர். அங்கு தங்கி உள்ள ஊழியர்களின் குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து விவரமாக கேட்டறிந்தனர். மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.