கோவையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.60 லட்சம் செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
கோவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.60 லட்சம் செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை அவினாசி ரோடு பீளமேட்டில் ஒரு தனியார் நட்சத்திர ஓட்டல் அருகே ஜெயின் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் காலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரான வெங்கடேசின் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர், தனது பெயர் தஸ்பிகீர் என்றும் நாமக்கல்லில் இருப்பதாகவும், தொழில் விஷயமாக, கோவையில் சில நாட்கள் தங்க இருப்பதால் குளிர்சாதன வசதி கொண்ட வீடு வேண்டும் என்று கேட்டு, பதிவு செய்து கொண்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஒரு சொகுசு காரில் 6 பேர் அங்கு வந்தனர். அந்த காரை ஓட்டி வந்தவர் தனது பெயர் தஸ்பிகீர் என்றும், ஏற்கனவே வீடு வாடகைக்கு எடுத்து உள்ளதாக கூறி, தான் முன்பதிவு செய்த வீட்டின் சாவியை வாங்கி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவரும் கீழே இறங்கி காரில் ஏறி புறப்பட்டனர்.
அப்போது காவலாளி, எப்போது திரும்ப வருவீர்கள் என்று தஸ்பிகீரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறி விட்டு வேகமாக காரில் சென்றுள்ளனர். இதனால் அவர்களின் நடவடிக்கையில் காவலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் வெங்கடேசுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
உடனே அவர், தஸ்பிகீரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது பேச முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் வெங்கடேசிடம் இருந்த மற்றொரு சாவியை போட்டு அந்த வீட்டை திறந்து சோதனை செய்தனர். அப்போது படுக்கை அறையில் இருந்த கட்டிலின் கீழ்ப்பகுதியில் பெரிய பை ஒன்று இருந்தது. அதை போலீசார் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் ரூ.60 லட்சத்துக்கு கட்டுக்கட்டாக செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள் 60 கட்டுகள் இருந்தன.
உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். இதையடுத்து போலீசார் தஸ்பிகீரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவருடைய பெயர் தஸ்பிகீர் தானா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவையில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.