தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு வருகிற 19–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி,
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க கோரி, கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு வருகிற 19–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனைத்து தொழிற்சங்க கூட்டம்கோவில்பட்டியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட அலுவலகத்தில் நேற்று அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழரசன்(ஏ.ஐ.டி.யூ.சி), ராஜசேகரன்(ஐ.என்.டி.யூ.சி), சங்கரலிங்கம்(5–வது தூண்) ராமகிருஷ்ணன்(அண்ணா தொழிற்சங்கம்), விஜயபாண்டியன்(தொழிலாளர் முன்னேற்ற சங்கம்), கிருஷ்ணவேணி(சி.ஐ.டி.யூ) மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோவில்பட்டி தாலுகாவில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கப்படாதது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
காத்திருப்பு போராட்டம்கடந்த 7 ஆண்டுகளாக தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தொழிலாளர் துறை சார்பில் இணை ஆணையர் தலைமையில் கோவில்பட்டி உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்தாத தீப்பெட்டி ஆலை நிர்வாகத்தினரை கண்டித்து வருகிற 19–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.