நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா: தேர்கள் சுத்தம் செய்வதற்காக பணி தொடக்கம்
நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது.
நெல்லை,
நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளியூரை சேர்ந்த பக்தர்களும் தேரோட்டத்தை பார்ப்பதற்காக நெல்லைக்கு வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா வருகிற 19–ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 27–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான பணிகள் தொடங்குவதற்காக கடந்த 1–ந் தேதி நெல்லையப்பர் கோவில் 2–வது பிரகாரத்தில் விநாயகர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.
நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் உள்ளன. இந்த தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக தேரினை சுற்றியுள்ள பாதுகாப்பு கண்ணாடி கொட்டகை அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் சுத்தம் செய்யப்படும் பணி தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.