வருகிற 11–ந் தேதி தேர்தல்: ஜெயநகர் தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு தேவேகவுடா அறிவிப்பு
வருகிற 11–ந் தேதி நடைபெறும் பெங்களூரு ஜெயநகர் தொகுதி தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தேவேகவுடா அறிவித்தார்.
பெங்களூரு,
வருகிற 11–ந் தேதி நடைபெறும் பெங்களூரு ஜெயநகர் தொகுதி தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தேவேகவுடா அறிவித்தார்.
பா.ஜனதா வேட்பாளராக பிரகலாத்224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரசாரத்தின்போது, பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைடுத்து அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த தொகுதியில் வருகிற 11–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் வேட்பாளராக விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டியும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் களேகவுடாவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவுஇந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. அதன் பிறகு நடைபெற்ற ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அங்கு ஜனதா தளம்(எஸ்) தனித்து நின்று தோல்வியை அடைந்தது.
இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் போட்டியில் இருந்து விலகுவதாக ஜனதா தளம்(எஸ்) கட்சி அறிவித்துள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கு ஆதரவு வழங்குவதாக தேவேகவுடா கூறி இருக்கிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று தேவேகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.