மாணவி சேர்க்கை விஷயமாக பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் பள்ளி ஆசிரியைகள் புகார்
11–ம் வகுப்பில் மாணவி சேர்க்கை குறித்து நடந்த பிரச்சினையில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ்நிலையத்தில் பள்ளி ஆசிரியைகள் புகார் செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியை மற்றும் ஆசிரியைகள் 50–க்கும் மேற்பட்டோர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளித்தனர். புகாரில் கூறியிருப்பதாவது:– எங்களது பள்ளியில் மாணவி ஜோதி 11–ம் வகுப்பு சேர்க்கை விஷயமாக, மாணவியின் பெற்றோர் அணுகிய போது சேர்க்கை முடிந்து விட்டது என்று பதில் அளிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் தலைமை ஆசிரியையை தரக்குறைவாக பேசியும், பணி செய்ய விடாமலும் தொந்தரவு செய்தனர்.
மேலும் டிரைவர் பாக்கியம் தலைமையில் 10–க்கும் மேற்பட்டோர் பள்ளி வாசல் முன்பு நின்று கொண்டு ஒருமையில் திட்டி கோஷமிட்டதுடன், கொலை மிரட்டல் செய்தனர். பள்ளி பணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் மாணவிகளும், ஆசிரியைகளும் அச்சம் கொண்டுள்ளனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பள்ளி செயலாளர் கனகராஜ் கொடுத்த புகார் மனுவில்:– ஜோதி என்ற மாணவி 11–ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பம் கொடுத்தார். கணித பிரிவில் குறைந்தது 85 மதிப்பெண் பெற்று இருந்தால் தான் கணித பிரிவு கொடுக்கமுடியும். இருந்தாலும் பள்ளி கல்வி கமிட்டியில் கேட்டு 2 நாட்கள் கழித்து வந்து கேட்டு கொள்ளுமாறு அனுப்பி விட்டேன்.
தற்போது அனைத்து மாணவிகளின் சேர்க்கை முடிவடைந்த நிலையில், மாணவியின் தந்தை தினமும், அடியாட்களுடன் வந்து பள்ளியில் மிரட்டுவதால் மாணவிகளும், ஆசிரியைகளும், மாணவிகளின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே ஜோதி என்ற மாணவிக்கு சேர்க்கை கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுக்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.