வீட்டிலிருந்தே வாக்களிக்கும் புதிய செல்போன் செயலி கிராமத்து மாணவர் சாதனை
வீட்டிலிருந்தே வாக்களிக்கும் புதிய செல்போன் செயலியை கண்டுபிடித்து கிராமத்து மாணவர் சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர்
சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் குருசாமி. பொறியியல் பட்டதாரியான இவர் செல்போன் மூலம் வாக்களிக்கும் செயலியை கண்டுபிடித்துள்ளார். 100 சதவிகித வாக்குப்பதிவு, பெரும் அளவிலான பொருட்செலவு குறைப்பு, பணிச்சுமை மற்றும் பாதுகாப்பு சுமை ஆகியவற்றை குறைப்பதோடு, உலகின் எந்த மூலையிலிருந்தும் வாக்களிக்கும் வகையிலான முற்றிலும் பாதுகாப்பான முறையில் எளிமையான செயலியை உருவாக்கியுள்ளார்.
இந்த செயலி குறித்து அவரிடம் கேட்ட போது:– புதிய கண்டுபிடிப்பான இந்த செயலியில், தேர்தல் ஆணையம், வாக்காளர்கள், தேர்தல் முடிவு என மூன்று பகுதிகளை கொண்டதாகும். தேர்தல் ஆணையம் பகுதியில், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் தமது ஆதார் எண்ணை பயன்படுத்தி லாக்இன் செய்யலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆதார் எண்களை மட்டுமே அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாக்காளர் லாக்இன் செய்தவுடன் அவரது செல்போன் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஓ.டி.பி அனுப்பப்படும். அதை என்டர் செய்தவுடன் திரையில் வேட்பாளர் பட்டியல் தோன்றும். வாக்காளர் தாம் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரை கிளிக் செய்தவுடன், வாக்களிக்க விருப்பமா என்று உறுதி செய்யும் பெட்டி தோன்றும்.
ஆம் என்று கிளிக் செய்தால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு சென்றுவிடும். அதை தொடர்ந்து வாக்காளரின் ஐ.டி லாக் அவுட் செய்யப்படும். அவரால் மறுபடியும் வாக்கு செலுத்த முடியாது. வாக்கு பதிவு நடக்க, நடக்க அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும். வாக்குப்பதிவு நேரம் முடிந்ததும் உடனடியாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு அறிவித்து விடலாம்.
போனில் வைக்கும் கைரேகையும் ஆதார் அட்டைக்கு கொடுத்திருக்கும் கைரேகையும் பொருந்தினால் தான் வாக்கு செலுத்த உள்நுழைய முடியும் என்பதனால் முறைகேட்டிற்கு வழியில்லை என்கிறார் குருசாமி. மேலும் பிரைவேட் கிளவுட் முறையில் இதை செயல்படுத்தலாம் என்பதால் யாரும் ஊடுருவ முடியாது என்றும் நேரடி சாட்டிலைட் சிக்கனல் மூலமும் இதை இயக்கலாம் என்பதால் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இருக்காது என்கிறார்.
இவரது தந்தை அச்சக கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார், தாய் தீப்பெட்டி கூலித்தொழிலாளியாவார். அண்ணன், அக்கா, தம்பி என குடிசையில் வாழ்ந்தாலும் சமூகத்திற்கு பயன்படும் இது போன்ற சாதனை கண்டுபிடிப்பின் மூலம் வறுமை சாதனைக்கு தடையல்ல என்பதை நிருபித்திருக்கிறார் என்ஜினீயரிங் பட்டதாரி குருசாமி. இவருக்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவரது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?