போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு: கவனக்குறைவாக பணியாற்றிய ஏட்டு பணியிடை நீக்கம்


போலீஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு: கவனக்குறைவாக பணியாற்றிய ஏட்டு பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 7 Jun 2018 3:45 AM IST (Updated: 7 Jun 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போன சம்பவத்தில், பணியின் போது, கவனக்குறைவாக இருந்ததாக கூறி ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவிட்டார்.

கரூர்,

கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் அழகுராமு பணியிலிருந்தார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை போலீஸ் நிலையத்தின் முன்புறத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளை விசாரித்து கொண்டிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்ட போது தான், மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் அந்த மோட்டார் சைக்கிளானது அரசு சார்பில் இரவு ரோந்து பணிக்காக கொடுக்கப்பட்டது ஆகும். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அழகு ராமு அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

போலீஸ் நிலையத்திற்குள்ளேயே மோட்டார் சைக்கிள் திருட்டு போன சம்பவம் போலீஸ் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸ் துறை உயரதிகாரிகள் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்து அன்றைய தினம் பணியிலிருந்த போலீசாரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி பணியில் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தினர்.

மேலும் அன்றைய தினம் போலீஸ் நிலையத்தில் இரவு “பாரா” பணியில் ஏட்டு பழனிவேல் இருந்தார். எனவே போலீஸ் நிலையத்தில் வழக்கு ஆவணம், அரசு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு அவர் தான் பொறுப்பு ஆகும். இந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸ் துறை அதிகாரிகள் அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் பணியில் கவனக்குறைவுடன் இருந்ததாக குறிப்பிட்டு ஏட்டு பழனிவேலை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் லந்தகோட்டையை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 26) என்பவரை கைது செய்து கரூர் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து ஏராளமான திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story