கோவை-பெங்களூரு இடையே சேலம் வழியாக இன்று முதல் ஈரடுக்கு ரெயில் இயக்கம்


கோவை-பெங்களூரு இடையே சேலம் வழியாக இன்று முதல் ஈரடுக்கு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 8 Jun 2018 4:15 AM IST (Updated: 8 Jun 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

கோவை-பெங்களூரு இடையே சேலம் வழியாக இன்று முதல் ஈரடுக்கு ரெயில் இயக்கப் படுகிறது.

சூரமங்கலம்,

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு “டபுள் டக்கர்“ எனப்படும் ஈரடுக்கு இருக்கை வசதிகளுடன் கூடிய ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக கோவை-ஜோலார்பேட்டை இடையே ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை அறிக்கை தெற்கு ரெயில்வேக்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் வழியாக கோவை-பெங்களூருவுக்கு ஈரடுக்கு ரெயில்வே சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், புதிய ஈரடுக்கு ரெயில் சேவை தொடக்க விழா கோவை ரெயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி ராஜன் கோஹெய்ன் கலந்து கொண்டு புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

இந்த ஈரடுக்கு ரெயில் உதய் திட்டத்தின் கீழ் இயக்கப் படும் முதல் ரெயிலாகும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியதால் ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இந்த ரெயில் இன்று மட்டும் கோவையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு மாலை 5.20 மணிக்கு சென்றடையும். அதன்பிறகு வருகிற 10-ந் தேதி (ஞாயிறு) முதல் திங்கட்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் காலை 5.45 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து (வண்டி எண்-22666) புறப்பட்டு, சேலம் ரெயில் நிலையத்திற்கு காலை 8.12 மணிக்கு வந்தடையும். பின்னர், சேலத்தில் இருந்து 8.15 மணிக்கு புறப்படும் ரெயில், ஜோலார்பேட்டை, குப்பம், கிருஷ்ணராஜ புரம் வழியாக சென்று மதியம் 12.40 மணிக்கு பெங்களூரு செல்லும்.

அதேபோல், மறுமார்க்கமாக பெங்களூரு-கோவை (வண்டி எண்-22665) ஈரடுக்கு ரெயில் பெங்களூருவில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சேலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 5.47 மணிக்கு வந்தடையும். அதன்பிறகு சேலத்தில் 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், இரவு 9 மணிக்கு கோவை செல்கிறது. கோவையில் இருந்து பெங்களூருவுக்கு ரூ.610-ம், சேலத்தில் இருந்து கோவைக்கு ரூ.345-ம், சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ரூ.450-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரடுக்கு இருக்கை வசதிகள் கொண்ட இந்த ரெயிலில் 10 பெட்டிகள் உள்ளன. இதில் 3 பெட்டிகளில் டைனிங் டேபிள் வசதியுடன் 104 இருக்கைகளும், 5 பெட்டிகளில் டைனிங் வசதியில்லாாமல் 120 இருக்கைகளும் உள்ளன. மேலும், மினி டைனிங் டேபிள், ஏ.சி. வசதி, வை-பை வசதி, ஜி.பி.எஸ். கருவி, அதிநவீன கழிப்பிட வசதியும் உள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story