குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Jun 2018 10:45 PM GMT (Updated: 7 Jun 2018 6:59 PM GMT)

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் தாலுகா எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரம்பலூர் மின்நகர் மற்றும் விஸ்தரிப்பு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மின் நகர் மற்றும் விஸ்தரிப்பு குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் கடந்த 4-ந்தேதி கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரி வித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மின்நகர் மற்றும் விஸ்தரிப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் 3 பெண்கள் திடீரென்று காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்துவதற்காக சாலைக்கு ஓடினர். அப்போது பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்து வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் போலீசார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன், பெரம்பலூர் தாசில்தார் (பொறுப்பு) சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்பட அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் இன்னும் சில நாட்களில் உங்கள் பகுதிக்கு மீண்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story