பள்ளி மாணவி அபர்ணா கொலை வழக்கு: புதுக்கோட்டையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை


பள்ளி மாணவி அபர்ணா கொலை வழக்கு: புதுக்கோட்டையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2018 10:15 PM GMT (Updated: 7 Jun 2018 7:19 PM GMT)

பள்ளி மாணவி அபர்ணா கொலை செய்யப்பட்ட வழக்கில் புதுக்கோட்டையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைக்குமார். இவரது மகள் அபர்ணா (வயது 15), மகன் நிஷாந்த் (6) ஆகியோர் கடந்த 9.3.2011-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அபர்ணாவை கொலை செய்து விட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அபர்ணா புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபர்ணா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலைக்குமார் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 13.12.2011-ந் தேதி அபர்ணா கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்ய வில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலைக்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கடந்த 13.7.2012-ந் தேதி அபர்ணா கொலை வழக்கு விசாரணையை நவம்பர் 2012-க்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனாலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 27.9.2013-ந் தேதி சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அபர்ணா கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டைக்கு வந்து தங்கிய, சி.பி.ஐ. அதிகாரி ரவி தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிலரை அழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் அலுவலக பணி காரணமாக நேற்று மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு புதுக்கோட்டை வந்தனர். அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து அபர்ணா கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. 

Next Story